Wednesday, August 25, 2004

ஒரு துளை... ஓர் உலகம்!

சின்னச் சின்ன வார்த்தைகள் கோத்த கவிதையாய்... மழை! முகத்தில் தெளித்தசாரலில் பூரிப்படையாமல்... வானிற்கும், பூமிக்கும் இடையே உள்ள வளிமண்டலம், மழைத்துளிகளால் துளைபட்டுப்போனதே என்ற கவலைதான்எனக்கு! இந்த மழையின் சலசலப்பில் "காற்றின் அலைவரிசை கேட்கிறதா?"...

ஆக, மழையின் கவிதை எனக்கு இரசிக்கும்படியாய் இல்லை!...

"இத்துடன் இன்றைய சேவை முடிகிறது" - கவிதையில் கடைசியாய் முற்றும்!...


கால் அயர கொஞ்சம் நடந்தேன்... அந்த தென்னை மரம்! விழுந்த மழைத்துளிகளில், சிலவற்றைச் சேகரித்து... குட்டியாய் ஒரு கவிதை - ஹைகூ!...

அட! வானத்தின் மழை, பல துளிகள்... பல வார்த்தைகள்... 'கவிதை' என்றால்...
விருட்ச மழை, சில துளிகள்... சில வார்த்தைகள்... 'ஹைகூ' தானே!!...

ம்...! என்றால், கவிதையில் இருந்துதான் ஹைகூ ...

என்னைப் போன்றவர்கள் வான் மழையில் நனைவதற்கு ஆசைப்படுவதேஇல்லை...! இந்த மரத்தில் உதிர்ந்து விழும் சில துளிகள்... சுகமே அலாதிதான்!

எனக்கு 'வைரமுத்து' வேண்டாம்... 'தண்ணீர் தேசம்'... ஜலதோஷம் பிடிக்கும்! 'இறையன்பு' போதும்... இதமாய் 'முகத்தில் தெளித்த சாரல்'... புத்துணர்ச்சி! (அப்பாடி! சேரல், பூபி, வீரு... எல்லாம் தூரமா இருக்கீங்க!)

சரி! மழை புராணத்தை விடுங்கள்!... கவிதையை ஒரு வானமாகக் கொள்வோம்... ஹைகூ ... இதோ!... இந்த மரத்தின் இலையினைப் போல் சிறியது...

வானம் எங்கே... இலை எங்கே!... ஆனால்... ஆனால்... அட!... இந்த மரத்தின்இலைகளையும்... அதற்கு அப்பால் தெரியும் வானத்தையும் பார்த்தால்...

"வானம், இலைகளினிடையே சிறைப்பட்டிருப்பது போல் தோன்றவில்லை?"...

சே! இதென்ன வெகுளிப்பேச்சு!... மேற்கோள் காட்டிய விதம் சரியில்லை!... இன்னும் கொஞ்சம் யோசி!

யோசித்தால்...

"எல்லைகள் இடப்பட்ட வானம்... எல்லைகள் இடப்பட்ட கவிதை... 'ஹைகூ'க்கள்"

ம்... இது நன்றாக இருக்கிறது!...

கவிதைக்கு எல்லையிட்டால் ஹைகூ... ஆயிற்று!

இவ்வளவு சொல்லிவிட்டு ஒரு ஹைகூ சொல்லாமல் போனால் எப்படி...

(சிலருக்கு ஏற்கனவே சொல்லியதுதான்...)


"வானத்தின் எல்லைகள்
நிர்மாணிக்கப்பட்டன
இலைகளினூடே"