Wednesday, December 21, 2011

உலை


போராட்டம். அடுத்தடுத்த செய்திகளும் அதனைப் பற்றியே; தொடர்ந்து சொட்டுச் சொட்டாய் கழிவறைக் கதவின் கீழுள்ள இடுக்கின் வழியே கசிந்து என் காதை நனைத்தது.

Toilet seat-இன் மேல், மூன்றாவது முறையாக வந்து மாட்டிக்கொண்ட அந்தப் பூச்சியினைக் கவனித்தேன்.

அலறுதல், அபயக்குரல் எழுப்புதல், அருவருத்தல், அடித்தல் ஆகிய பரிமாண நிலைகளை வயதுகளால் தாண்டி, எதனையும் எதிர் கொள்வதை விட நேர் கொள்வோமே என்ற நிலையில் ஊன்றிய தருணம்.

முதல் இரண்டு முறையும் நீரைத் தெளித்தேன்; தரையில் துளியாய் விழுந்தது. மூழ்கிவிடாத வண்ணம் நீரினாலேயே பக்கச்சுவரை எட்ட வைத்தேன். தொற்றிக்கொண்டது. பிழைத்தது.

என்ன பயன்? மறுபடியும் இங்கே.

இறங்க வேண்டுமா? ஏற வேண்டுமா? எனச் சில நகர்வுகள் முன்னும் பின்னும். இப்படியே ஒரு நிமிடப் போராட்டம் - ஒரு வாழ்க்கைப் போராட்டம், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், எனது பார்வையிலோ பூச்சியின் பார்வையிலோ.

"மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உறுதியளிக்க வேண்டும்" - போராட்டத்தின் பிரதிநிதியாய் இருக்க வேண்டும்.

இந்தப் பூச்சியினை வெளியில் விடுவதே அதன் பாதுகாப்பிற்குச் சரியான தீர்வு. முடிவுக்கு வந்தவனாய்க் கூடத்திற்கு வந்தேன்.

"அறிவியல் சம்பந்தமான விஷயங்களில், உச்ச நீதி மன்றமே எங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறது. நாங்கள் உறுதியளிக்கிறோம். இதனால் ஒரு ஆபத்தும் வராது" - கூறிக்கொண்டு இருந்தார் பரீட்சயமான அந்த விஞ்ஞானி. அவருக்குக் கீழ் இருந்த மேசைக்குள் பழைய செய்தித்தாள் கட்டு; அதில் ஒன்றை உருவிக்கொண்டேன்.

திரும்பினேன்.
நான் சென்று திரும்பிய கால இடைவெளியில் அங்கு எதுவும் நடந்ததாகவும் தெரியவில்லை; நகர்ந்ததாகவும் தெரியவில்லை.

சுருட்டிய தாளினை மெதுவாய் அதன் முன் சரித்தேன். தயக்கத்துடன் காகிதச் சறுக்கலில் ஏறியது. பாதிப் பயணம் முடிய பொறுமை காத்தேன். பிறகு கவனமாய் வாசல் நோக்கி...

"நடக்கவே நடக்காது என்கிறார்கள். Fukushima-வில் என்ன ஆயிற்று? உலக நடப்புகள் தெரியாத மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்களா? பாமரர்கள் தான். ஆனாலும் என்ன? நாங்கள் இருக்கிறோமே!" - பொதுத்தொண்டு சேவகி. அவர் பேச்சின் சூட்டினைக் கடந்து வெளியே வந்தேன்.

நெடுநேரம் வெயிலைத் தாங்கியதால் நிழலைச் சிந்திய அந்தப் பூந்தொட்டிதான் சரியான இடம். அதன் செடியின் மேல் உதறினேன்; உதிர்ந்தது பூச்சி.

'தன்னையே காத்துக்கொள்ளத் தெரியாத ஈரறிவை இந்த ஆறறிவு பிழைக்க...' என் எண்ணம் முடியும் முன் என்ன ஆயிற்று அந்தப் பூச்சிக்கு? அதன் ஓட்டத்தில் ஏன் இந்த வேகம்?

அடிப்பாகத்தில் இருந்து கிளைகிளையாய்க் கடந்து, உச்சிக்கிளையில் இலைஇலையாய்க் கடந்து, கடைசி இலையின் நுனியைத் தொட்டு நின்றது.

'என் இந்த பரபரப்பு? பதிலாய்த் தெரிகிறது அந்தத் தீயெறும்பு...' என்று என் ஆறறிவு உணரும் முன்னே.. கடித்தது. துடி துடித்தது.

கூடம் நோக்கிச் சென்றேன்.

'மாட்டிக்கொண்டது என்றாய்'.
'போராடியது என்றாய்'.
'தப்பிக்க ஏறியது என்றாய்'.
'வெளியில் விட்டாய். விட்டு விட்டாய். விட்டு விட்டது. விட்டு வந்துவிட்டாய்'.
'ஒருவேளை அதன் போக்கிலேயே விட்டிருந்தால்...?'

மன அலைகளின் இரைச்சலைத் தவிர்க்க தொலைக்காட்சியின் ஒலியைப் பெருக்கினேன்.

அங்கே, போராட்டப் பந்தல்; கொதித்துக் கொண்டிருந்தது.
உள்ளே மக்கள் உதிர்ந்து கொண்டிருந்தார்கள்.

image courtesy: http://blog.handcraft.com

Sunday, December 18, 2011

Beyond 'Common Sense'


காட்சி 1:
"அப்பா! பெருந்துறை ரோட்டுல 'Reliance Communications' எங்கப்பா இருக்கு?"

சாப்பிட்டுக் கொண்டிருந்த என் நண்பன் கேட்டான்.

"என்னத்திற்கு?"

"என்னோட இன்டர்நெட் கனெக்ஷன க்ளோஸ் பண்ணனும்."

"அந்த ரோட்லதான் இருக்குன்னு யார் சொன்னது?"

"போன் பண்ணிக் கேட்டேன். சொன்னாங்க!"

"போன் நம்பர் என்ன?"

நண்பனின் அம்மா வைத்திருந்த கொள்ளுத் துவையலில் காரணமின்றி ஊடுருவி இருந்த மல்லி விதைகளை, சலிப்புடன் கூடிய பொறுப்புடன், ஒவ்வொன்றாய் பொறுக்கித் தட்டின் ஓரமாய் வைத்துக்கொண்டிருந்த என் கவனத்தை இழுத்தது இந்தக் கேள்வி.

மேம்போக்காய்ப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றினாலும், இந்தக் கேள்வியின் நோக்கம் புரியவில்லை. நண்பன் தேடும் விடைக்கு எந்த விதத்திலும் உதவக்கூடிய கேள்வியாக இல்லையே இது. இதைக் கேட்டவரின் நோக்கம்தான் என்ன? தன் மகனின் ஞாபகத் திறனுக்கு வைக்கப்பட்ட சோதனையா? தனக்குத் தெரியவில்லை என்பதை மறைக்கும் விதமாய் விழுந்த காரணமற்ற வினாவா? - என்று என் ஊகங்களின் எல்லைகளை விரிப்பதற்கு முன், சில பொழுதுகளே என் மூளை ஓட்டிய காட்சி தங்களின் பார்வைக்கும்...

காட்சி 2:
கல்லூரி வளாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த STD பூத் வரிசையில் நான்.

நினைத்த பொழுதில் பேச கைபேசியோ, நெருங்கியவர்களின் தொலைபேசி எண்களைத் துண்டுச் சீட்டிலாவது குறித்து வைக்கும் பொறுப்புணர்வோ என்னிடம் இல்லாத காலம். எனது முறை வந்தது.

அவசரமாய் அப்பாவிடம் பேச வேண்டும். இந்த நேரத்தில் அலுவலகத்தில் இருப்பார். நம்பர்? மூளையே மூலதனம் என்று, முன்னே அதன் மூலையிலே போட்டு வைத்திருந்த நம்பர்களைத் துழாவினேன்.

STD இலக்கங்களும், அங்கிரண்டு இங்கிரண்டு என நான்கு இலக்கங்களும் பொறுக்கி எடுத்துவிட்டேன். 0451-42_ _01. காலி இடங்களில் '67' வருமா? '76' வருமா? முட்டிக்கொண்டு நின்றேன். பின்னாலிருந்த வரிசை முறைத்துக் கொண்டு நின்றது. கணிதம் கற்றுக்கொடுத்த "combination"-ஏ சரணம்; 'இரண்டில்' ஒன்று பார்த்துவிடுவோம் என்று பொத்தான்களை அமுக்கினேன்.

"ஹலோ! யார் பேசறது?" - எதிர்முனை.

"ஹலோ! இது Fire Service-ங்களா?"

"யாருய்யா நீ? வம்பு பண்றியா? Fire Service-க்கு 101-ன்னு கூடவா தெரியாது?"

"இல்லைங்க என்.."

"Wrong number. மடச் சாம்பிராணிங்க! கழுத்தறுக்கராணுக!"

'டொக்'...

மறுபடியும் காட்சி 1:

"நான் call center-க்கு போன் பண்ணித் தெரிஞ்சுக்கிட்டேன்பா. அந்தக் கடை நம்பர் தெரியல!"
-என்று அமைதியாகப் பதில் சொன்னான் தொலைபேசித் துறையில் வேலை செய்து ஒய்வு பெற்றவரின் மகனான எனது நண்பன்.

அந்தப் பதிலுக்கும் அதற்குமுன் கேட்கப்பட்ட 'அர்த்தமுள்ள' கேள்விக்குமாய்ச் சேர்த்து, தீயணைப்புத் துறையில் வேலை செய்து ஒய்வு பெற்றவரின் மகனான நான், ஒரு புன்னகையை உதிர்த்தேன்; மல்லி விதைகளுக்கும் ஒரு காரணம் இருக்கக்கூடும்!