Wednesday, December 21, 2011

உலை


போராட்டம். அடுத்தடுத்த செய்திகளும் அதனைப் பற்றியே; தொடர்ந்து சொட்டுச் சொட்டாய் கழிவறைக் கதவின் கீழுள்ள இடுக்கின் வழியே கசிந்து என் காதை நனைத்தது.

Toilet seat-இன் மேல், மூன்றாவது முறையாக வந்து மாட்டிக்கொண்ட அந்தப் பூச்சியினைக் கவனித்தேன்.

அலறுதல், அபயக்குரல் எழுப்புதல், அருவருத்தல், அடித்தல் ஆகிய பரிமாண நிலைகளை வயதுகளால் தாண்டி, எதனையும் எதிர் கொள்வதை விட நேர் கொள்வோமே என்ற நிலையில் ஊன்றிய தருணம்.

முதல் இரண்டு முறையும் நீரைத் தெளித்தேன்; தரையில் துளியாய் விழுந்தது. மூழ்கிவிடாத வண்ணம் நீரினாலேயே பக்கச்சுவரை எட்ட வைத்தேன். தொற்றிக்கொண்டது. பிழைத்தது.

என்ன பயன்? மறுபடியும் இங்கே.

இறங்க வேண்டுமா? ஏற வேண்டுமா? எனச் சில நகர்வுகள் முன்னும் பின்னும். இப்படியே ஒரு நிமிடப் போராட்டம் - ஒரு வாழ்க்கைப் போராட்டம், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், எனது பார்வையிலோ பூச்சியின் பார்வையிலோ.

"மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உறுதியளிக்க வேண்டும்" - போராட்டத்தின் பிரதிநிதியாய் இருக்க வேண்டும்.

இந்தப் பூச்சியினை வெளியில் விடுவதே அதன் பாதுகாப்பிற்குச் சரியான தீர்வு. முடிவுக்கு வந்தவனாய்க் கூடத்திற்கு வந்தேன்.

"அறிவியல் சம்பந்தமான விஷயங்களில், உச்ச நீதி மன்றமே எங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறது. நாங்கள் உறுதியளிக்கிறோம். இதனால் ஒரு ஆபத்தும் வராது" - கூறிக்கொண்டு இருந்தார் பரீட்சயமான அந்த விஞ்ஞானி. அவருக்குக் கீழ் இருந்த மேசைக்குள் பழைய செய்தித்தாள் கட்டு; அதில் ஒன்றை உருவிக்கொண்டேன்.

திரும்பினேன்.
நான் சென்று திரும்பிய கால இடைவெளியில் அங்கு எதுவும் நடந்ததாகவும் தெரியவில்லை; நகர்ந்ததாகவும் தெரியவில்லை.

சுருட்டிய தாளினை மெதுவாய் அதன் முன் சரித்தேன். தயக்கத்துடன் காகிதச் சறுக்கலில் ஏறியது. பாதிப் பயணம் முடிய பொறுமை காத்தேன். பிறகு கவனமாய் வாசல் நோக்கி...

"நடக்கவே நடக்காது என்கிறார்கள். Fukushima-வில் என்ன ஆயிற்று? உலக நடப்புகள் தெரியாத மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்களா? பாமரர்கள் தான். ஆனாலும் என்ன? நாங்கள் இருக்கிறோமே!" - பொதுத்தொண்டு சேவகி. அவர் பேச்சின் சூட்டினைக் கடந்து வெளியே வந்தேன்.

நெடுநேரம் வெயிலைத் தாங்கியதால் நிழலைச் சிந்திய அந்தப் பூந்தொட்டிதான் சரியான இடம். அதன் செடியின் மேல் உதறினேன்; உதிர்ந்தது பூச்சி.

'தன்னையே காத்துக்கொள்ளத் தெரியாத ஈரறிவை இந்த ஆறறிவு பிழைக்க...' என் எண்ணம் முடியும் முன் என்ன ஆயிற்று அந்தப் பூச்சிக்கு? அதன் ஓட்டத்தில் ஏன் இந்த வேகம்?

அடிப்பாகத்தில் இருந்து கிளைகிளையாய்க் கடந்து, உச்சிக்கிளையில் இலைஇலையாய்க் கடந்து, கடைசி இலையின் நுனியைத் தொட்டு நின்றது.

'என் இந்த பரபரப்பு? பதிலாய்த் தெரிகிறது அந்தத் தீயெறும்பு...' என்று என் ஆறறிவு உணரும் முன்னே.. கடித்தது. துடி துடித்தது.

கூடம் நோக்கிச் சென்றேன்.

'மாட்டிக்கொண்டது என்றாய்'.
'போராடியது என்றாய்'.
'தப்பிக்க ஏறியது என்றாய்'.
'வெளியில் விட்டாய். விட்டு விட்டாய். விட்டு விட்டது. விட்டு வந்துவிட்டாய்'.
'ஒருவேளை அதன் போக்கிலேயே விட்டிருந்தால்...?'

மன அலைகளின் இரைச்சலைத் தவிர்க்க தொலைக்காட்சியின் ஒலியைப் பெருக்கினேன்.

அங்கே, போராட்டப் பந்தல்; கொதித்துக் கொண்டிருந்தது.
உள்ளே மக்கள் உதிர்ந்து கொண்டிருந்தார்கள்.

image courtesy: http://blog.handcraft.com

No comments: