Friday, September 24, 2004
இதுதான் மகாபாரதக் கதை...
மகாபாரதம்! மகா..பாரதம்! மகா....பாரதம்! தொடர்ந்து வந்த சங்கின் ஒலியில் கூட நான் எழுந்திருக்கவில்லை போலும்! ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தூர்தர்ஷன் இப்படி அனைவரையும் பக்தியும் பரவசமுமாகத் தொலைக்காட்சியின் முன் அமரவைத்த காலம் அது! ஒன்பது மணி வரைத் தூங்கும் பையனைக் கண்டிக்காத பெற்றோர் எனக்கு! அப்பா என்னை எழுப்ப வந்தால், அம்மா முறைப்பாள் - "ராத்திரி பூரா படிச்சுட்டு உறங்குறான் பிள்ளை! கொஞ்ச நேரம் தூங்கவிடுங்களேன்!"
தலையணைக்கு அடியில் இரவு முழுக்கக் கண்விழித்துப் படித்த கல்கண்டு, முத்தாரம், பாக்யா இத்யாதிகள்! அம்மாவின் அனுசரணையான தாலாட்டில்?!! இன்னும் சுகமாய்ப் போர்த்திக் கொண்டு தூங்குவேன்!
இந்த நீண்ட தூக்கதால் எதனை இழந்தேனோ இல்லையோ! இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் இழந்தே விட்டேன்!
அப்போதெல்லாம் இது பெரிதாகத் தோன்றவில்லை! ஆனால், கல்லூரியில் எனது நண்பன் 'குபாரவி', மகாபாரதம் சொல்ல ஆரம்பித்த பொழுதுதான், "ஆகா! அன்றே பார்க்காமல் விட்டேனே!" என்று தோன்றியது.
******
ஒரு கதை சொல்லும் பொழுது, "ஒரு ஊர்ல!" என்று ஆரம்பித்துப் பக்கத்திலிருப்பவர்கள் "ம்!", "ம்!" கொட்டிக் கேட்பதெல்லாம் அந்தக்காலம்.
இந்த யுக்தி தற்போதுள்ள குழந்தைகளுக்குக் கதை சொல்ல வேண்டுமானால் உதவலாம்.("போங்கத் தாத்தா! நீங்க ஒரே BORE!" என்று குழந்தைகளும் இந்த யுக்திக்கு 'டாட்டா' சொல்லிவிட்டதாகக் கேள்வி!)
ஆனால் அதே கதையை கல்லூரி நண்பர்களுக்குச் சொல்லும்போது வழக்கம் போல "ஒரு ஊர்ல!" என்று ஆரம்பித்துதான் பாருங்களேன்! நேரம் ஆக ஆக, "ம்!" என்ற ஒலி குறைந்து கொண்டே போகும்! பிறகு ஒரு நேரத்தில் நீங்கள் மட்டும் தனியாகப் பேசிக் கொண்டிருப்பீர்கள்! உங்கள் நண்பர்களிடம் இருந்து "வெறும் காத்து தாங்க வரும்!"
அப்படியொரு சொப்பனலோகத் தூக்கத்தில் இருப்பார்கள்!
"நீ தூங்கு நான் கதை சொல்றேன்!" எனப் பெரியவர்கள் குழந்தைகளிடம் ஆரம்பித்தால் எனக்குச் சிரிப்புதான் வரும். ஏனென்றால் முடிவில் தூங்கப் போகிறவர் கதை சொல்பவர்தான்! கதை கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தையின் "ம்!" சுருதி கடைசிவரைக் குறையாது. அவ்வளவு ஆர்வம், மழலை உள்ளங்களுக்கு!
ஒருவேளை இப்படியும் எனக்கொரு நினைப்பு உண்டு! பெரியவர்கள் தாங்கள் நிம்மதியாகத் தூங்கத்தான் குழந்தைகளுக்குக் கதை சொல்கிறார்களோ? என்று! இந்தச் சந்தேகத்திற்குப் பெரியவர்கள் தயவு செய்து தீர்வு சொல்ல வேண்டும்!
ஆக, "ஒரு ஊர்ல!" கண்டிப்பாய்க் கல்லூரிக்கு ஒத்துவராது! சரி, அப்படியென்றால் வேறு எப்படித்தான் கதை சொல்லுவதாம்?
************
எனது கல்லூரி அறையில் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், மூங்கில் கோட்டை எனப் பல புத்தகங்கள் நண்பர்களின் கண்களைப் பறிக்கும்! ஆனால் ஏதோ ஒரு விசை அவர்களைத் தடுக்கும்.
ஒன்று, அவர்கள் ஆங்கில வழியிலேயே வந்திருப்பார்கள். இல்லையெனில், தமிழ் வாசிப்பது கடிமான வேலை என்று நினைப்பவர்களாக இருக்கும்!
இருந்தாலும், அவர்களின் ஆர்வம் இப்படித்தான் வெளிப்படும் - "டே! சிவகாமியின் சபதம் நல்ல புத்தகம்னு சொல்லுவியே! அதோட கதையைச் சொல்லு!"
நானும் முறுவலித்தபடி இரவு ஒன்பது மணிக்கு மேல் வரச்சொல்லுவேன். எனக்குத் தெரியும்! சிவகாமியின் சபதம் அவ்வளவு எளிதாய்ச் சொல்லி முடிகிற கதை இல்லை என்று! அதுவும் என் நாவில் இருந்து வெளிப்பட்டால் பல நாட்கள் சிவகாமி மனதில் தங்கிவிடுவாள்!(மாமல்லர் கோபித்துக்கொள்ளப் போகிறார்!)
இப்பொழுது இரவு கதை கேட்க நண்பர்கள் தலையணைகளோடு?!! தயாராய் வந்துவிட்டார்கள்! கதையை எப்படி ஆரம்பிப்பது?
வந்த நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு மூலையில், தலையணையை மடியில் வைத்துக்கொண்டு "ம்! சொல்லுடா!" என்றார்கள்.
"நான் சொல்வது கிடக்கட்டும்! முதலில் உங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி! யாரிந்தச் சிவகாமி?" என்றேன் நான். அறையில் நிசப்தம்.
சில மணித்துளிகள் கழித்து, "சரி! பல்லவர்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?"
சட்டென்று பதில் வந்தது. "மகேந்திர வர்மா, நரசிம்ம வர்மா!..."- நண்பன் இன்னும் யோசித்தான்.
"ரொம்பச் சரி! நீ எப்போ இதப் படிச்சன்னு ஞாபகம் இருக்கா?" - நான்.
"Probably in seventh or eighth standard!". அவன் சொன்னதை அனைவரும் ஆமோதித்தார்கள்.
"இன்னும் கொஞ்சம் யோசி! எட்டாவதில், நமது வரலாற்று நூலில் அவர்களை ஒரு பத்தியில் அடக்கிவிடுவார்கள்! ஆனால் அந்த ஒரு பத்தியில் அவர்களின் பட்டப்பெயர்கள், வாழ்ந்த இடம்..." நான் முடிக்கவில்லை.
இன்னொரு நண்பன் இடையில் புகுந்தான் - "ஆங்! They ruled Kanchipuram! அப்புறம் அவங்க ரெண்டு பேர்ல யாருக்கோ 'வதபி கொண்டான்'னு பட்டப்பேர்!"
"டே! அது வதபி இல்ல 'வாதாபி'! Chalukya's capital city!"- இன்னொரு நண்பன் திருத்தினான்.
"நீங்கள் சொன்னதெல்லாம் சரி! அந்த ஒரு பத்தியில் அடங்கிய பல்லவர்கள்தான் ஒரு புத்தகமாய் வெளிப்பட்டு இருக்கிறார்கள்! சிவகாமி வேறு யாருமன்று! நரசிம்மரோட 'லவ்'...!"
இந்த இடத்தில் 'லவ்' என்பதைக் கவனிக்க வேண்டும்! கல்லூரிப் பையன்களுக்கு 'லவ்' என்ற வார்த்தையைச் சொன்னாலே உற்சாகம் தானாக வந்துவிடும்!
இதோ, மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல அனைவரும் மடியிலிருந்த தலையணையை ஓரமாய் வைத்துவிட்டு என்னருகே வந்தார்கள். ஒருவன் மட்டும் காதில் ரகசியமாய் "காதல் கதையா?" என்று கிசுகிசுத்தான்.
"மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல! அதையும் தாண்டி..." சொல்லிக்கொண்டே போனேன்.
இடையிடையே வரலாற்றிலும், புவியியலிலும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டேன்.
அஜந்தா, எல்லோரா எங்க இருக்கு?
சளுக்கியர்கள் இந்தியாவில் எந்தப் பகுதியை ஆண்டார்கள்?
ஹர்ஷர் - பாஹியன் ஞாபகம் இருக்கா?
ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் பதில் சொன்னார்கள்.
எனக்குக் களைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்! மணி நான்கு! புலிகேசி சிவகாமியாய்ச் சிறைப்பிடிக்குமிடத்தில் நிறுத்தினேன். "நாளைக்குப் பார்க்கலாமே!"
"ஹே! நாளன்னிக்கு எனக்கு லேப்! அதனால நாளைக்கு வேண்டாம்! நாளை மறுநாள், ப்ளீஸ்!" ஒரு நண்பன் கெஞ்சினான்.
எல்லோரும் கூடிப் பேசிய பிறகு, "நாளை மறுநாள்!" எனச் சொல்லிச் சென்றார்கள்.
"கேட்பவர்களுக்குத் தெரிந்த ஞானத்தைக் கொண்டு கேள்வியும் பதிலுமாகக் கதை சொல்லும் யுக்தியினைப் பின்பற்றுவது அவசியம் - முக்கியமாய் கல்லூரி மாணவர்களுக்கு!"
நண்பர்கள் சிவகாமியின் சபதத்துடன் விடவில்லை! பொன்னியின் செல்வனையும் சொல்லக் கேட்டுக் கொண்டார்கள்! அது மட்டுமன்றி, வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை மாலை 6:30க்குத் திருச்சி வானொலியில் ஒலிபரப்பபடும் சிவகாமியின் சபதத்தையும் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
என்னடா இவன்? மகாபாரதத்தில் ஆரம்பித்து சிவகாமியின் சபதத்தில் முடித்துவிட்டானே என்று நீங்கள் கேட்பது புரிகின்றது!
"நீங்கள் மெகா சீரியல் பார்ப்பீங்களா?" என்று என்னிடம் கேட்டு, கற்றுக் கொடுத்தவனிடமே வித்தையைக் காட்டி, 'குபாரவி' மகாபாரதக் கதை சொன்னதை நாளை சொல்கிறேனே!
தொகுப்புகள்:
தொடர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment