Tuesday, September 28, 2004

மகாபாரதம் தொடர்கிறது...

"நீங்கள் மெகா சீரியல் பார்ப்பீங்களா?"

இந்தக் கேள்வியை குபாரவி கேட்டவுடன், திரு. ராஜா தலைமையில் நாங்கள் நடத்திய பட்டிமன்றம்தான் கண்முன் விரிந்தது. "இன்றைய இளைஞரின் வெளிநாட்டு மோகம் - சரியா? தவறா?" என்ற தலைப்பில், 'சரியே!' என்று பேசிய எனது நண்பன் மெகா சீரியல்களைப் பற்றிக் கூறும்போது, "தினமும் எங்கள் வீட்டில் 'ரொட்டி ஒலி' கேட்கிறதோ? இல்லையோ?... 'மெட்டி ஒலி' கேட்கிறது!" எனச் சொன்னான்.

எனக்கும் மெகா சீரியல் என்றால் எட்டிக்காய்! பெரும்பாலும் குழந்தைகள், பெரியோர்களுக்கே புத்திமதி சொல்லும் அளவுக்கு மெகா சீரியல்கள் பெரியோர்களை அடிமைப்படுத்துகிறது என்பது என் எண்ணம்!

"அந்தத் தப்பை நான் செய்யமாட்டேன்!"-என்றேன் நான்.

"என்ன இப்படிச் சொல்லிட்டீங்க! சரி, உங்களுக்கு ஒரு கேள்வி! முதன்முதலில் மெகா சீரியல் ஒளிபரப்பியத் தொலைக்காட்சி என்னவோ?"

சிறிது நேர யோசனைக்குப் பிறகு,"டெல்லி தூர்தர்ஷன்!" என்றேன்.

"சரி! முதல் மெகா சீரியல்?"

"எனக்குத் தெரிந்து, 'சாந்தி'யும், 'விழுதுகளும்' தான் ஞாபகத்திற்கு வருகின்றன!"- மந்த்ராபேடியை நினைத்துக் கொண்டே கூறினேன்.

"ம்ஹூம்! இன்னும் முன்னாடிப் போங்க!"-குபாரவி.

தலையைச் சாய்த்து உதட்டைப் பிதுக்கினேன்.

"என்ன யூனா! இதுகூடவா தெரியல! 'மகாபாரதம்'தான் முதல் மெகா சீரியல்!" என்றான்.

அட! ஆமாம்! மகாபாரதம் எவ்வளவு வாரங்கள் ஓடின! என்றால், அதுதானே...
இல்லையில்லை. "டே! மெகாசீரியலுக்குன்னு சில வரைமுறைகள் இருக்கே! முக்கியமா பெண்களை அழவைக்கணுமே!"- நான்.

"அச்சோ! பெண்களென்ன? ஆண்களையும் சேர்த்துக் கண்ணீரும் கம்பலையுமாய் பக்தியுடன் அழ வைத்த மெகா சீரியல் ஆயிற்றே மகாபாரதம்!"-மடக்கினான் அவன்.

ஆக, மகாபாரதம் ஒரு 'மெகாபாரதம்'! அப்புறம், என்பதுபோல் அவனைப் பார்த்தேன்!

"ஓ.கே! இராமயணக் காலத்திலும் மகாபாரதக் காலத்திலும் வாழ்ந்த இரண்டு கதாபாத்திரங்கள் கூறுங்கள் பார்ப்போம்!"

ஒன்று அனுமன் என்பது எனக்குத் தெரியும்! இராமரும், கிருஷ்ணனும் திருமாலின் அவதாரங்கள்! ஆனால், வெவ்வேறு கதாபாத்திரங்கள்!

"ஒருவர் அனுமன்! இன்னொருத்தர் யாரு?"- எதிர்க்கேள்வி கேட்டேன்.

குபாரவி புன்னகைத்தபடி, "முதல்ல அனுமன் எப்படின்னு சொல்லுங்க ?" என்றான்.

அவனுக்குப் பின்வருமாறு நான் சிறுவர்மலரில் படித்த பாரதக் கதையைக் கூறினேன்.

********

பதின்மூன்று வருடங்கள் வனவாசம் செய்ய வேண்டுமென்று கௌரவர்கள் பாண்டவர்களைப் பணித்தார்கள். அவ்வாறே ஒப்புக்கொண்டு பாண்டவர்களும் அரண்ய வாசம் மேற்கொண்டார்கள்.

ஒருநாள் காற்றிலே தவழ்ந்து வந்துத் தன்முன் வீழ்ந்த 'பாரி ஜாத' மலரைத் திரௌபதி
கையிலெடுத்தாள். அந்த மலரின் சௌந்தர்யமும் மணமும் அவளை மயக்கின. உடனிருந்த பீமனிடம் திரௌபதி சொன்னாள்: "இந்த மலரின் மகிமை என்னை மயக்கியது! நான் இதை அன்புடனே தரும புத்திரனுக்குக் கொடுப்பேன்! நீ இந்த மலர்களை எனக்கு இன்னும் பறித்துக்
கொடுப்பாய்!". சொல்லிய வண்ணம் தருமனைத் தேடிக் காதலுடன் சென்றாள்.

பீமனும், திரௌபதியிடம் பிரதிக்ஞை செய்தபடி மலர் வந்த திக்கில் நடக்கலானான். அந்தப்பாதை இரு மருங்கே செழித்து வளர்ந்த ஒரு வாழைத் தோப்பினூடே சென்றது. அந்தப் பாதையின் குறுக்கே ஒரு கிழக்குரங்கு படுத்துக் கிடந்தது. பலசாலியான் பீமன் அதனை மிரட்டிப் பார்த்தான்.

முடிவிலே குரங்கு' "ஐயா! உன்னைப் பார்த்தால் தருமவானாகத் தெரிகிறது! நீர் வயோதிகனான என்னை நிந்தனை செய்யலாமா? என்னால் எழுந்து நடக்கக்கூடச் சக்தியில்லை! ஆதலால், பாதையில் கிடக்கும் என் வாலை அப்பால் நகர்த்திவிட்டு, உமது மார்க்கம் செல்லும்!" என்றது.

வாயு புத்திரனான பீமன் ஒரு கையால் குரங்கினது வாலை நகர்த்தப் பார்த்தான்! வால் அசைந்து கொடுக்கவில்லை. பீமன் வியந்து இரு கைகளாலும் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்துப் பார்த்தான். ம்ஹூம்! பிறகே முன்னிருப்பது தேவரிஷி என்று எண்ணிக் கைகூப்பினான்.

அந்தக் குரங்கே அனுமன்!

அனுமன் பிறகு தனது வாமன வடிவத்தைக் காட்டி தன் சகோதரனான பீமனைத் தழுவி வரம் கொடுத்தான் என்பது புராணம்!

*****************

குபாரவி, "மிகச்சரி! ஆனால் இந்தச் சம்பவம் மட்டுமன்று! மகாபாரத காலத்தில் அனுமன் இருந்தார் என்பதற்கு இன்னுமொரு சம்பவமும் இருக்கிறது! கேளுங்கள்!" என்று பின்வரும் கதையைக் கூறினான்.

****************

தனது குருகுலத்தில் சிஷ்யர்களுக்கு இராமனின் மகிமையை விளக்க, குருவான வியாசர் இராமாயணக் கதையைக் கூறலானார். இராமனின் பக்தனான அனுமனும் இராமர் மகிமையை கேட்டு இன்புறும் பொருட்டு, ஒரு சிஷ்யனாக அவதரித்துக் கொண்டு கதையைக் கேட்டான். இவ்வாறு, ஒவ்வொரு நாளும் இராமாயணம் வியாச முனிவாரால் சொல்லப்பட்டது.

அப்படியே, ஒரு நாள் அனுமன் அசோகவனத்தில் சீதையைக் கண்ட காட்சியை விவரித்தார் வியாசர். "அனுமன் தன் வாமன வடிவத்தைச் சுருக்கி ஒரு வானரமாய் அசோகவனத்திற்குள் புகுந்தான். அங்கே சீதை விருட்ச நிழலொன்றில் தலைவிரி கோலமாய் இருந்தாள். அனுமன்
அசோகவனத்தைச் சுற்றி நோட்டமிட்டான். அங்கே அழகியத் தாமரைத் தடாகமொன்று இருந்தது. அதனுள் மலர்ந்த வெள்ளைத் தாமரைகள் மிதந்தன."

பரவசமாய் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சீடன் வியாசரின் கடைசி வரியால் துணுக்குற்று ஐயத்துடன் எழுந்தான். குருவை வணங்கி,"குருவே! எனது ஐயத்தைத் தாங்கள் தீர்க்க வேண்டும்! நான் இராமாயணக் கதையைப் பலமுறைக் கேட்டிருக்கிறேன்! எனக்குத் தெரிந்த வரையில் அசோகவனத் தாமரைத் தடாகத்தில் செவ்விய (சிவந்த) மலர்களே பூத்திருந்ததாகத் தோன்றுகிறது!" என்றான்.

சந்தேகம் கேட்பது சாட்சாத் அனுமன்தானெனத் தன் ஞானக் கண்ணால் உணர்ந்த வியாசர் முறுவலித்தபடி, "சீடனே! நீரே அனுமன் என்றணர்ந்தேன்! நீரே கதையின் நாயகன் ஆயினும், உமக்கும் சொல்வேன்! நீர் பார்த்தது வெள்ளைத் தாமரை மலர்களை!" என்றார்.

மேலும் ஆச்சர்யம் அடைந்தவனாக அனுமன் தோன்றினான். என்னடா இது? நானே அனுமன்! நானே கூறுகிறேன், நான் பார்த்தது சிவந்த மலர்கள் என்று! வியாசர் அதனையும் மறுக்கிறாரே என்று நினைத்தான்.

வியாசர் அனுமனின் தயக்கம் குறித்து, அன்புடன் பின்வருமாறு கூறினார்: "அனுமனே! நீ அசோகவனம் சென்றதும் உண்மை! அங்கே தடாகத்தில் தாமரை மலர்களைக் கண்டதும் உண்மை! ஆனால், இராமனின் பதிவிரதையான சீதாதேவி தலைவிரி கோலமாய் இருந்தது கண்டு உன் கண்கள் சிவந்திருந்தன! சிவந்த கண்களினூடே வெண்தாமரைகள், செந்தாமரைகளாகத் தெரிந்தன!" என்று தெளிவுபடுத்தினார்.

மகாபாரதத்தில் வரும் இந்தச் சம்பவத்தின் உட்பொருள்: "ஒருவன் கோபப்படும் பொழுது, அவன் சுற்றத்தைக் கூட, சரிவரத் தெரிந்துகொள்ள முடியாது! ஏனெனில், ஆத்திரம் அவனது புலனறிவை மறைத்துவிடும்!"-இவ்வாறு குபாரவி கூறி முடிக்க, எனக்கும் மனத்திலே சொல்ல முடியாத ஒரு இன்பம் பெருகிற்று!

அந்தக் காலத்தில் எவ்வளவு அழகாக நீதியினைக் கதைகளின் மூலம் மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார்கள்! மகாபாரதத்தை, 'தரும சாஸ்திரம்' என்று கூறுவது எவ்வளவு பொருத்தம்!

குபாரவியின் முதுகினைத் தட்டிக் கொடுத்து, "டே! ரொம்பவே நல்ல கதை! சரி, இராமயணக் காலத்திலும் மகாபாரதக் காலத்திலும் வாழ்ந்த இரண்டாமவர் யார்?"- ஆர்வத்துடன் கேட்டேன்.

"ம்! என்ன யூனா! இதுகூட இன்னும் உங்களுக்குத் தெரியலையா?" என்று பீடிகையுடன் சிரித்தான் குபாரவி.

உங்களுக்காவது ஏதாவது விளங்கியதா?

No comments: