Friday, February 18, 2005

தவம்...

ஒரு துளி...ஒரு வரி; மறு துளி...மறு வரி...
வானம் ஒவ்வொரு வரியையும் கவனமாக பூமித்தாளில் எழுதிக்கொண்டிருந்தது.
கணினித் திரையிலிருந்து கண்கள் விலகி கண்ணாடிச் சாளரத்தில் விழுந்தன.

வானத்தின் ஒவ்வொரு வரியும் கண்ணாடியில் பட்டுத்தெறித்தது.

ஒரு துளி...ஒரு வரி...ஒரு நொடி...

ஆனால் அந்த ஒரு நொடியில், சட்டென்று சூரிய ஒளியில் மின்னி மறையும் அதன்
வர்ணங்கள்...

ஒரு துளி...ஒரு வரி...ஒரு நொடி...ஒரு வானவில்...

பட்டுத்தெறிக்கும் சின்னச் சின்ன வானவில்கள்...மனத்திற்கு மகிழ்ச்சியளிப்பதாய்...!

ஒரு துளி(யின்) மகிழ்ச்சியாவது மற்றவர்க்கு நாம் கொடுக்கிறோமா?... தனது
சமூகத்தைத் தானே பரிகசிக்க ஒப்பவில்லை மனம். மனம், எண்ண ஓட்டத்தை
மாற்றும் பொருட்டு கவித்துவமாக சென்றது.

ஒரு துளி...ஒரு வரி...ஒரு வானவில்...

எங்கேயோ பா.கே.ப ஞாபகம். நெற்றியைச் சுருக்கி விரித்தேன்... கவிதையையும்!

"சகியே...
இமைப்பொழுதில்
எப்படித் தீட்டினாய் வானவில்லை
ஓ!
உன் இமைத்தூரிகையில் மழைத்துளி!.."

இது பூபேஷின் கவிதையல்...தொலைபேசி 'இணைப்பு' சிந்தனையைத் 'துண்டித்தது'...

----------------

"Hello!"

"Hello! Good Afternoon Sir!"

"ஹே நீதி! Good Afternoon!"

"Hello...! Is it Mr. Suresh?"

"அச்சோ! போதும் விளையாண்டது... நான் தான் பேசறேன்!"

"...! Sir, I'm calling from Standard Chartered Bank. Am I speaking to Mr.
Suresh?"

"...! y..es, Suresh here... what do you want?"

அடுத்த இரு நிமிடங்களில் அவள் பேசியது கடவுளுக்கே வெளிச்சம்.
உரையாடலுக்கு முற்றுப்புள்ளியாக வேறொரு வங்கியின் பெயரைக் கூறி, அதில்
ஏற்கனவே காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துவிட்டதாகப் பொய் கூறினேன்.

"Anyway, thank you for your patience Sir! you can help us by referring some
of your friends Sir! Bye...!"

எதிர்முனையின் ஏமாற்றம் நன்றாகவே வெளிப்பட்டு அடங்கியது. அவளுக்கு
மட்டுமா என்ன? எனக்கும்தான். அதே குரல்! அந்தக் குரலைக் கேட்டு முழுமையாக
ஒரு வருடம் ஓடிவிட்டது! இருந்தும் என்னால் மறக்கமுடியவில்லை. எவ்வளவு
பரீட்சயமான குரல். அந்தக் குரல்தான் இன்று என்னை ஏமற்றிவிட்டது.

------------------

திடீரென்று அவளின் ஞாபகம்... மனத்தில் ஒரு நாடா மின்னலெனப் பின்
சுழன்று, முன் சுழன்றது.

கண்களை இறுக மூடிக்கொண்டேன்!

'கூடாது; அவளை மறந்துவிடு; மழையை மறந்துவிடு' - அறுந்த நாடாவைப் போல்
மனம் திரும்பத் திரும்பச் சொன்னது. திசை திருப்பும் விதமாகக் கணினியில்
ஆழ்ந்தேன்.

சேரலின் கவிதை திரையில்...

"தேவையே என்றாலும் சபிக்கப்படுகின்றது
குடை மறந்த நாளில்
பெய்யும் மழை!"

என்னையும் அறியாமல் மழையின் மீது கோபம் வந்தது. குடை இருந்தாலும்
இல்லாவிட்டாலும் மழை சபிக்கத்தான்படுகிறது... விரல்கள் நடுங்கின
விசைப்பலகையில்...

"தேவையே என்றாலும் சபிக்கப்படுகின்றது
மழை,
அவள் நினைவால்...!"

சிந்தனை ஒருமுகப் படுத்தப்பட்டுவிட்டது! இதயத்தில் நான் கட்டிவைத்த அணை
உடைக்கப்பட்டுவிட்டது. கணினியில் திறந்த 'சாளரங்களை' மூடிவிட்டு
எழுந்தேன்.

---------------------

மனதளவில் பாதித்த ஒரு குழந்தையின் உடலில் கிறுக்கி மகிழும் குரூரச்
சிறுவனைப் போல் நடந்துகொண்டது மழை. அதன் வரிகளைப் பொருட்படுத்தாமல்
முன்னே நடந்தேன், எண்ணங்கள் பின் செல்ல...

"ஹா...அச்சு!"

"மழை நேரத்துல icecream சாப்பிடாதனு எத்தனை முறை சொல்றது...இப்ப பாரு!"

அனிச்சையாய் எனது கரம் அவளின் தலைக்கு மேலே விரிந்தது...குடையாக!

"நானென்ன திருமால் அவதாரமா?" - க்ளுக்கென்று சிரித்தாள்.

"இல்லையா பின்ன! மேகம், மேகம் அதற்கிடையில் நாகம்" - புன்னகைத்தேன்.

"ம்...அப்படின்னா?"

நாகம் போல் குவிந்த கரத்தினால் அவள் கூந்தல் தொட்டு, பிறகு தலைக்கு நேரே
மேலிருக்கும் மேகத்தையும் காட்ட நினைத்தேன்... காட்டவில்லை!

"என்னவோபா! நானும் வைரமுத்துவ படிக்கிறேன்! ஆனா நீ சொல்றது மட்டும்
புரியவே மாட்டேங்கு...ஹச்சு!"

இம்முறை கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தாள். கணப்பொழுதுதான்...
ஆனால் நாவின் நுனிக்கு வந்துவிட்டதே...

"கணப்பொழுது
நிலவு மறைக்கும்
மேகம்" - என்பதற்கு பதிலாக ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தேன்.

ஒருவேளை சொல்லியிருந்தால், 'ம்..? தயவுசெஞ்சு புரியற மாதிரி சொல்லு...
இல்லேனா ஆள விடு' - என்று அவள் கண்கள் குறுகுறுக்கும். அதனால்...

விட்டுவிட்டேன்! எனது கவிதைகள் யாருக்குதான் புரிந்திருக்கின்றன,
உனக்குப் புரிவதற்கு?

----------------------

உரசிச் சென்ற வாகனத்தால் மறுபடியும் நிகழ்காலம்!

'போதும் நிறுத்து! உனது கவிதை சகிக்கவில்லை' - தெப்பமாக என்னை நனைத்த
வானத்தைத் திட்டினேன்

...வாயிலும் சில வரிகள்...!

----------------------

"Suresh! எனக்கு bore அடிக்குது! ஏதாவது interesting-ஆ சொல்லேன்!"

"வேணாம்ப்பா! நான் ஏதாவது சொன்னா, நீ புரியாதும்ப... இந்த ஆட்டைக்கு நான் வரல!"

"ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்! இனிமே அப்படி சொல்லமாட்டேன்... புரியாட்டியும்
கூட" - கண்சிமிட்டினாள்.

"கவிதையும் ஒரு தவம்! சீர் குலைந்த தவமும் சீர் கலைந்த கவிதையும்
மதிப்பற்றதாகிவிடுகிறது" - அவளை உன்னிப்பாய்க் கவனித்தேன்.

"கண்டிப்பா Suresh!..."

"ஆனால் வேடிக்கையை பாரேன்...! இவற்றினூடே ஒரு பெண் புகுந்தால் தவம்
'கெட்டும்' கவிதை 'மேன்மையும்' அடைகின்றது".

அவளின் அகலக் கண்கள் அழகாய் விரிந்தன. கொஞ்சம் சுருதி கூட்டிக் கூறினேன்:

"அதனால நான் இப்ப தவம் செய்யப்போறேன்"

நினைத்தபடியே அவள் அமைதியானாள், அவள் இடையில் புகுந்து எனது 'கவிதை'
மேன்மையடைய வேண்டும் என்று நான் நினைத்த போதும்!...

"தண்டவாளத்தில்
தலைசாய்ந்து கிடக்கும்
ஒற்றைப் பூ
நான்.

நீ
நடந்து வருகிறாயா?
இரயிலில் வருகிறாயா?"

"வாவ்! Great. ரொம்ப நல்லா இருக்குது" - அவளின் ஒவ்வொரு அசைவும்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. "

Author?"-என்றாள்.

"பழனிபாரதி!"

"ஓ! இந்தக் 'காதலுக்கு மரியாதை'! அட, பரவாயில்லையே! சினிமாப் பாட்ட விட
கவிதை நல்லாவே எழுதறாறே!"

அவளின் பாராட்டுக்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்.

மறுபடியும் அமைதி...இம்முறை இன்னும் கூடுதலாக! 'அடிப் பெண்ணே! இன்னும்
புரியவில்லையா உனக்கு, நான் சொன்ன தவத்தின் பொருள்?... என்னைச் சீண்டு,
தொந்தரவு செய்... கவிதையினூடே புகுந்து கொள்!...பழனிபாரதியை மிஞ்சிக்
காட்டுகிறேன்'.

அமைதி! அமைதி!

எனக்குக் கவிதை வரவில்லை. இருந்தாலும் அவளை ஏமாற்ற மனமில்லை.
கணப்பொழுதில் அந்தக் கவிதை ஞாபகம் வந்தது...

"கணப்பொழுது
நிலவு மறைக்கும்
மேகம்"

பரீட்சயமானவளாகத் தெரிந்தாலும் மிகவும் யோசித்தவளாய்த் தெரிந்தாள்...மிகவும்.

"கைக்குட்டை!" - 'உனது' என்று சொல்ல வந்த நாவைக் கடித்து, "அவளின்
கைக்குட்டை!" என்றேன்.

"அய்யோ! பின்னிட்டான் போ...என்ன சொல்றதுன்னே தெரியல...எப்படிப்பா
இவங்களுக்கெல்லாம் 'காதல்' கவிதை கொட்டுது..."

எச்சிலை விழுங்கினேன். அவள் பேசிக் கொண்டே போனாள்.

"இவங்கல்லாம் கவிதை எழுதுறதுக்குன்னே காதலிப்பாங்களா, என்ன? நமக்கெல்லாம்
நாள் பூரா யோசிச்சா கூட தேறமாட்டேங்குது...! பழனிபாரதி, the great!"

"அவர் இல்ல..." - இழுத்தேன்.

எனது இமைகள் அசையவில்லை.

"ஓ! அவர் இல்லையா! அப்போ வேற யாரு?"

மறுபடியும் ஒரு எச்சில் விழுங்கல்.

நிலவைப் பார்த்தே கூறினேன் - "அறிவு மதி!"

"அட, நம்ம அறிவுமதியா! 'நட்புக்காலம்' அறிவுமதி! excellent, அவரு
Friendship பத்திதான் நல்லா எழுதுவாருன்னா Love-லயும் புகுந்து
விளையாடுறாறே!"

----------------------

இன்னும் எதிரொலித்துக் கொண்டிருந்தது அவள் குரல். எப்படி மறக்க முடியும்
அவளை. அந்தக் கபடமறியா உள்ளத்தை. முழுமையாக ஒரு வருடம். எப்படி
இருக்கிறாளோ?

பாதங்களை யாரோ கட்டி வைத்திருப்பது போன்றொரு நினைவு! நடக்கவே கடினமாக
இருந்தது...மனத்தின் புலம்பலும் கடினமாக...

அவளை நான் பார்க்காமலும் பேசாமலும் இருப்பதற்கான காரணம் ஒன்றே
ஒன்றாகத்தான் இருந்தது...'எனது தவத்தை அவள் புரிந்து கொள்வது கடினம்!'

இப்படியே சமாதானம் சொல்லி நாட்களைக் கடத்தியாயிற்று...ஆனால் இன்று
முடியவில்லை...கண்டிப்பாக முடியவில்லை.

கேட்டே தீரவேண்டும்... நான் ஒன்றும் அவளைத் துன்புறுத்தப்
போவதில்லை...கவிதை சொல்லி குழப்பப் போவதில்லை!

இன்று கேட்டே தீரவேண்டும்...!

அந்தக் கடையினுள் நுழைந்தேன்.

மழையின் உக்கிரம் கடையின் அமைதியில் தெரிந்தது. அந்தக் கண்ணாடிக்
கூண்டினுள் சென்றேன்.

எண்?...

---------------------

"ம்... ரெண்டு மாசம் Project-ஆ. ஆக, என்னோட இம்சையிலிருந்து
தப்பிச்சுட்ட...!" - ஆழத்தில் வேதனை இருந்தாலும் மேலோட்டமாய்ப்
புன்னகைத்தேன்.

"யாரப்படி சொன்னது... அப்படிச் சொல்லி நீ எங்கிட்ட இருந்து
தப்பிக்கலாம்னு பாக்குறியா...இப்பயே என்னோட torture-அ ஆரம்பிக்கிறேன்?"
என்றபடியே எனது உள்ளங்கையில் கிறுக்கினாள்..

-1
T

"T power -1? அப்படின்னா?"

"அறிவுஜீவீ! அதையும் தான் கண்டுபிடியேன் பார்க்கலாம்! ஆனா ஒன்னு... இத
solve பண்ணினாலும் என்கிட்ட நீ மாட்டிக்குவ!" - சொல்லிவிட்டுச் சென்றாள்.

விடுதி மெத்தையில் இருந்து மூன்றடி எழும்பி குதித்தேன்... உடல் முழுவதும்
ஒரு பரவசம்! பல்துலக்கிவிட்டு ஓடினேன், அவ்விடம் நோக்கி...

----------------------

வெளியே இன்னும் மழை ஓய்ந்தபாடில்லை. கூண்டிற்கப்பால் ஒருவன் என்னை
முறைத்தான். கால்கள் கடுத்திருக்க வேண்டும்.

நான் பார்வையைச் சற்று விலக்கி, நிதானமாய்ச் சிந்தித்தேன். 'போதும் உனது
பகற் கனவு! அவளிடம் பேசிவிடு! சாந்தமடைவாய்!'

விரல்கள் நடுங்க, எண்களை அழுத்தினேன்.

......

"ஹலோ!"

"ஹலோ! நான்..."

"டே Suresh! நீயா? Stupid, Idiot..."

காதினில் தேன், அவள், 'பூ'!

ஒரு வார்த்தை பேசினேனா? தெரியாது. ஆனால் எவ்வளவு ஆனந்தம், என் மனதில்!

தேன்...இதயம் நிரம்பியது?? இல்லை...கண்டிப்பாய் இல்லை! தாகம், ஏக்கம்,
இன்னும்...இன்னும் தேன்!

"டொக்" - என்ற சப்தம் கேட்ட பொழுது சரியாய் அரை மணிநேரம் ஆகியிருந்தது.

இவ்வளவு நேரம் என்னைத் திட்டினாளா? தெரியவில்லை. நான் ஏதாவது பேசினேனா?
தெரியவில்லை. அவள் அழுதாளா? தெரியவில்லை.

எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!

'தவம்' - என் தவம் மேன்மை அடைந்தது!

எண்ணங்கள் ஒருமுகமாய் அவள் முகம் நோக்கி. அமைதி, ஆனந்தம், பேரானந்தம்...
வேறென்ன வேண்டும் எனக்கு?

இதய பாரம் குறைந்தது. நிதானம் பிரதானமாகியது. மெல்ல வீடு நோக்கி நடந்தேன்.

சாரல்..தூறல்..துளிகள், என மழையும் அமைதியை நோக்கி...

கண்களைப் பறிக்கும் விதமாய் மாலைச் சூரியன் எட்டிப் பார்ப்பது போலத்
தோன்றியது. கண்களுக்கு நிழலாய்க் கரம் குவித்து சூரியக் கிரணங்களை
இரசித்தேன்.

சட்டென நினைவுக்கு வந்து தலைக்கு மேலே பார்த்தேன்... ஒரு கரிய மேகம்
அமைதியாகச் சென்றது.

இம்முறை நாகமும், ஒரு மேகமும் மட்டுமே...

எனக்கு பின்புறமாய் சென்று கொண்டிருந்த அந்த மேகத்தின் வேகத்தையொத்து
நானும் திரும்பிப் பார்த்தேன்.

வானம், மேகம், மழை, காற்று - அமைதியாக...! ஒரு கணம் சுற்றும் முற்றும்
பார்த்தேன்... நான் நடந்து வந்த காலடிச் சுவடுகளும் கூட
அமை..சுவடுகள்...சுவடுகள்...

"துளிகளும்
வரிகளும்
தெறித்து விழுகின்றன...

நீ
விட்டுச் சென்ற
சின்னச் சின்ன
மழைநீர்த் தொட்டிகள்
நோக்கி..."

தவம், சீராக...!

2 comments:

Anonymous said...

Ithu kathai-ya illa nijama?

~ said...

kathaiyO nijamO ... romba kavithaiththanamaa irukku... pala valikaLai eRpaduththinaalum, anththa valiyilum oru sugam... mazhai mattumalla eththanai vishayangkaL.... nanRi surEsh..