"நீங்கள் மெகா சீரியல் பார்ப்பீங்களா?"
இந்தக் கேள்வியை குபாரவி கேட்டவுடன், திரு. ராஜா தலைமையில் நாங்கள் நடத்திய பட்டிமன்றம்தான் கண்முன் விரிந்தது. "இன்றைய இளைஞரின் வெளிநாட்டு மோகம் - சரியா? தவறா?" என்ற தலைப்பில், 'சரியே!' என்று பேசிய எனது நண்பன் மெகா சீரியல்களைப் பற்றிக் கூறும்போது, "தினமும் எங்கள் வீட்டில் 'ரொட்டி ஒலி' கேட்கிறதோ? இல்லையோ?... 'மெட்டி ஒலி' கேட்கிறது!" எனச் சொன்னான்.
எனக்கும் மெகா சீரியல் என்றால் எட்டிக்காய்! பெரும்பாலும் குழந்தைகள், பெரியோர்களுக்கே புத்திமதி சொல்லும் அளவுக்கு மெகா சீரியல்கள் பெரியோர்களை அடிமைப்படுத்துகிறது என்பது என் எண்ணம்!
"அந்தத் தப்பை நான் செய்யமாட்டேன்!"-என்றேன் நான்.
"என்ன இப்படிச் சொல்லிட்டீங்க! சரி, உங்களுக்கு ஒரு கேள்வி! முதன்முதலில் மெகா சீரியல் ஒளிபரப்பியத் தொலைக்காட்சி என்னவோ?"
சிறிது நேர யோசனைக்குப் பிறகு,"டெல்லி தூர்தர்ஷன்!" என்றேன்.
"சரி! முதல் மெகா சீரியல்?"
"எனக்குத் தெரிந்து, 'சாந்தி'யும், 'விழுதுகளும்' தான் ஞாபகத்திற்கு வருகின்றன!"- மந்த்ராபேடியை நினைத்துக் கொண்டே கூறினேன்.
"ம்ஹூம்! இன்னும் முன்னாடிப் போங்க!"-குபாரவி.
தலையைச் சாய்த்து உதட்டைப் பிதுக்கினேன்.

"என்ன யூனா! இதுகூடவா தெரியல! 'மகாபாரதம்'தான் முதல் மெகா சீரியல்!" என்றான்.
அட! ஆமாம்! மகாபாரதம் எவ்வளவு வாரங்கள் ஓடின! என்றால், அதுதானே...
இல்லையில்லை. "டே! மெகாசீரியலுக்குன்னு சில வரைமுறைகள் இருக்கே! முக்கியமா பெண்களை அழவைக்கணுமே!"- நான்.
"அச்சோ! பெண்களென்ன? ஆண்களையும் சேர்த்துக் கண்ணீரும் கம்பலையுமாய் பக்தியுடன் அழ வைத்த மெகா சீரியல் ஆயிற்றே மகாபாரதம்!"-மடக்கினான் அவன்.
ஆக, மகாபாரதம் ஒரு 'மெகாபாரதம்'! அப்புறம், என்பதுபோல் அவனைப் பார்த்தேன்!
"ஓ.கே! இராமயணக் காலத்திலும் மகாபாரதக் காலத்திலும் வாழ்ந்த இரண்டு கதாபாத்திரங்கள் கூறுங்கள் பார்ப்போம்!"
ஒன்று அனுமன் என்பது எனக்குத் தெரியும்! இராமரும், கிருஷ்ணனும் திருமாலின் அவதாரங்கள்! ஆனால், வெவ்வேறு கதாபாத்திரங்கள்!
"ஒருவர் அனுமன்! இன்னொருத்தர் யாரு?"- எதிர்க்கேள்வி கேட்டேன்.
குபாரவி புன்னகைத்தபடி, "முதல்ல அனுமன் எப்படின்னு சொல்லுங்க ?" என்றான்.
அவனுக்குப் பின்வருமாறு நான் சிறுவர்மலரில் படித்த பாரதக் கதையைக் கூறினேன்.
********
பதின்மூன்று வருடங்கள் வனவாசம் செய்ய வேண்டுமென்று கௌரவர்கள் பாண்டவர்களைப் பணித்தார்கள். அவ்வாறே ஒப்புக்கொண்டு பாண்டவர்களும் அரண்ய வாசம் மேற்கொண்டார்கள்.
ஒருநாள் காற்றிலே தவழ்ந்து வந்துத் தன்முன் வீழ்ந்த 'பாரி ஜாத' மலரைத் திரௌபதி
கையிலெடுத்தாள். அந்த மலரின் சௌந்தர்யமும் மணமும் அவளை மயக்கின. உடனிருந்த பீமனிடம் திரௌபதி சொன்னாள்: "இந்த மலரின் மகிமை என்னை மயக்கியது! நான் இதை அன்புடனே தரும புத்திரனுக்குக் கொடுப்பேன்! நீ இந்த மலர்களை எனக்கு இன்னும் பறித்துக்
கொடுப்பாய்!". சொல்லிய வண்ணம் தருமனைத் தேடிக் காதலுடன் சென்றாள்.
பீமனும், திரௌபதியிடம் பிரதிக்ஞை செய்தபடி மலர் வந்த திக்கில் நடக்கலானான். அந்தப்பாதை இரு மருங்கே செழித்து வளர்ந்த ஒரு வாழைத் தோப்பினூடே சென்றது. அந்தப் பாதையின் குறுக்கே ஒரு கிழக்குரங்கு படுத்துக் கிடந்தது. பலசாலியான் பீமன் அதனை மிரட்டிப் பார்த்தான்.
முடிவிலே குரங்கு' "ஐயா! உன்னைப் பார்த்தால் தருமவானாகத் தெரிகிறது! நீர் வயோதிகனான என்னை நிந்தனை செய்யலாமா? என்னால் எழுந்து நடக்கக்கூடச் சக்தியில்லை! ஆதலால், பாதையில் கிடக்கும் என் வாலை அப்பால் நகர்த்திவிட்டு, உமது மார்க்கம் செல்லும்!" என்றது.
வாயு புத்திரனான பீமன் ஒரு கையால் குரங்கினது வாலை நகர்த்தப் பார்த்தான்! வால் அசைந்து கொடுக்கவில்லை. பீமன் வியந்து இரு கைகளாலும் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்துப் பார்த்தான். ம்ஹூம்! பிறகே முன்னிருப்பது தேவரிஷி என்று எண்ணிக் கைகூப்பினான்.
அந்தக் குரங்கே அனுமன்!
அனுமன் பிறகு தனது வாமன வடிவத்தைக் காட்டி தன் சகோதரனான பீமனைத் தழுவி வரம் கொடுத்தான் என்பது புராணம்!
*****************
குபாரவி, "மிகச்சரி! ஆனால் இந்தச் சம்பவம் மட்டுமன்று! மகாபாரத காலத்தில் அனுமன் இருந்தார் என்பதற்கு இன்னுமொரு சம்பவமும் இருக்கிறது! கேளுங்கள்!" என்று பின்வரும் கதையைக் கூறினான்.
****************
தனது குருகுலத்தில் சிஷ்யர்களுக்கு இராமனின் மகிமையை விளக்க, குருவான வியாசர் இராமாயணக் கதையைக் கூறலானார். இராமனின் பக்தனான அனுமனும் இராமர் மகிமையை கேட்டு இன்புறும் பொருட்டு, ஒரு சிஷ்யனாக அவதரித்துக் கொண்டு கதையைக் கேட்டான். இவ்வாறு, ஒவ்வொரு நாளும் இராமாயணம் வியாச முனிவாரால் சொல்லப்பட்டது.
அப்படியே, ஒரு நாள் அனுமன் அசோகவனத்தில் சீதையைக் கண்ட காட்சியை விவரித்தார் வியாசர். "அனுமன் தன் வாமன வடிவத்தைச் சுருக்கி ஒரு வானரமாய் அசோகவனத்திற்குள் புகுந்தான். அங்கே சீதை விருட்ச நிழலொன்றில் தலைவிரி கோலமாய் இருந்தாள். அனுமன்
அசோகவனத்தைச் சுற்றி நோட்டமிட்டான். அங்கே அழகியத் தாமரைத் தடாகமொன்று இருந்தது. அதனுள் மலர்ந்த வெள்ளைத் தாமரைகள் மிதந்தன."
பரவசமாய் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சீடன் வியாசரின் கடைசி வரியால் துணுக்குற்று ஐயத்துடன் எழுந்தான். குருவை வணங்கி,"குருவே! எனது ஐயத்தைத் தாங்கள் தீர்க்க வேண்டும்! நான் இராமாயணக் கதையைப் பலமுறைக் கேட்டிருக்கிறேன்! எனக்குத் தெரிந்த வரையில் அசோகவனத் தாமரைத் தடாகத்தில் செவ்விய (சிவந்த) மலர்களே பூத்திருந்ததாகத் தோன்றுகிறது!" என்றான்.
சந்தேகம் கேட்பது சாட்சாத் அனுமன்தானெனத் தன் ஞானக் கண்ணால் உணர்ந்த வியாசர் முறுவலித்தபடி, "சீடனே! நீரே அனுமன் என்றணர்ந்தேன்! நீரே கதையின் நாயகன் ஆயினும், உமக்கும் சொல்வேன்! நீர் பார்த்தது வெள்ளைத் தாமரை மலர்களை!" என்றார்.

மேலும் ஆச்சர்யம் அடைந்தவனாக அனுமன் தோன்றினான். என்னடா இது? நானே அனுமன்! நானே கூறுகிறேன், நான் பார்த்தது சிவந்த மலர்கள் என்று! வியாசர் அதனையும் மறுக்கிறாரே என்று நினைத்தான்.
வியாசர் அனுமனின் தயக்கம் குறித்து, அன்புடன் பின்வருமாறு கூறினார்: "அனுமனே! நீ அசோகவனம் சென்றதும் உண்மை! அங்கே தடாகத்தில் தாமரை மலர்களைக் கண்டதும் உண்மை! ஆனால், இராமனின் பதிவிரதையான சீதாதேவி தலைவிரி கோலமாய் இருந்தது கண்டு உன் கண்கள் சிவந்திருந்தன! சிவந்த கண்களினூடே வெண்தாமரைகள், செந்தாமரைகளாகத் தெரிந்தன!" என்று தெளிவுபடுத்தினார்.
மகாபாரதத்தில் வரும் இந்தச் சம்பவத்தின் உட்பொருள்: "ஒருவன் கோபப்படும் பொழுது, அவன் சுற்றத்தைக் கூட, சரிவரத் தெரிந்துகொள்ள முடியாது! ஏனெனில், ஆத்திரம் அவனது புலனறிவை மறைத்துவிடும்!"-இவ்வாறு குபாரவி கூறி முடிக்க, எனக்கும் மனத்திலே சொல்ல முடியாத ஒரு இன்பம் பெருகிற்று!
அந்தக் காலத்தில் எவ்வளவு அழகாக நீதியினைக் கதைகளின் மூலம் மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார்கள்! மகாபாரதத்தை, 'தரும சாஸ்திரம்' என்று கூறுவது எவ்வளவு பொருத்தம்!
குபாரவியின் முதுகினைத் தட்டிக் கொடுத்து, "டே! ரொம்பவே நல்ல கதை! சரி, இராமயணக் காலத்திலும் மகாபாரதக் காலத்திலும் வாழ்ந்த இரண்டாமவர் யார்?"- ஆர்வத்துடன் கேட்டேன்.
"ம்! என்ன யூனா! இதுகூட இன்னும் உங்களுக்குத் தெரியலையா?" என்று பீடிகையுடன் சிரித்தான் குபாரவி.
உங்களுக்காவது ஏதாவது விளங்கியதா?

மகாபாரதம்! மகா..பாரதம்! மகா....பாரதம்! தொடர்ந்து வந்த சங்கின் ஒலியில் கூட நான் எழுந்திருக்கவில்லை போலும்! ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தூர்தர்ஷன் இப்படி அனைவரையும் பக்தியும் பரவசமுமாகத் தொலைக்காட்சியின் முன் அமரவைத்த காலம் அது! ஒன்பது மணி வரைத் தூங்கும் பையனைக் கண்டிக்காத பெற்றோர் எனக்கு! அப்பா என்னை எழுப்ப வந்தால், அம்மா முறைப்பாள் - "ராத்திரி பூரா படிச்சுட்டு உறங்குறான் பிள்ளை! கொஞ்ச நேரம் தூங்கவிடுங்களேன்!"
தலையணைக்கு அடியில் இரவு முழுக்கக் கண்விழித்துப் படித்த கல்கண்டு, முத்தாரம், பாக்யா இத்யாதிகள்! அம்மாவின் அனுசரணையான தாலாட்டில்?!! இன்னும் சுகமாய்ப் போர்த்திக் கொண்டு தூங்குவேன்!
இந்த நீண்ட தூக்கதால் எதனை இழந்தேனோ இல்லையோ! இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் இழந்தே விட்டேன்!
அப்போதெல்லாம் இது பெரிதாகத் தோன்றவில்லை! ஆனால், கல்லூரியில் எனது நண்பன் 'குபாரவி', மகாபாரதம் சொல்ல ஆரம்பித்த பொழுதுதான், "ஆகா! அன்றே பார்க்காமல் விட்டேனே!" என்று தோன்றியது.
******
ஒரு கதை சொல்லும் பொழுது, "ஒரு ஊர்ல!" என்று ஆரம்பித்துப் பக்கத்திலிருப்பவர்கள் "ம்!", "ம்!" கொட்டிக் கேட்பதெல்லாம் அந்தக்காலம்.
இந்த யுக்தி தற்போதுள்ள குழந்தைகளுக்குக் கதை சொல்ல வேண்டுமானால் உதவலாம்.("போங்கத் தாத்தா! நீங்க ஒரே BORE!" என்று குழந்தைகளும் இந்த யுக்திக்கு 'டாட்டா' சொல்லிவிட்டதாகக் கேள்வி!)
ஆனால் அதே கதையை கல்லூரி நண்பர்களுக்குச் சொல்லும்போது வழக்கம் போல "ஒரு ஊர்ல!" என்று ஆரம்பித்துதான் பாருங்களேன்! நேரம் ஆக ஆக, "ம்!" என்ற ஒலி குறைந்து கொண்டே போகும்! பிறகு ஒரு நேரத்தில் நீங்கள் மட்டும் தனியாகப் பேசிக் கொண்டிருப்பீர்கள்! உங்கள் நண்பர்களிடம் இருந்து "வெறும் காத்து தாங்க வரும்!"
அப்படியொரு சொப்பனலோகத் தூக்கத்தில் இருப்பார்கள்!
"நீ தூங்கு நான் கதை சொல்றேன்!" எனப் பெரியவர்கள் குழந்தைகளிடம் ஆரம்பித்தால் எனக்குச் சிரிப்புதான் வரும். ஏனென்றால் முடிவில் தூங்கப் போகிறவர் கதை சொல்பவர்தான்! கதை கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தையின் "ம்!" சுருதி கடைசிவரைக் குறையாது. அவ்வளவு ஆர்வம், மழலை உள்ளங்களுக்கு!
ஒருவேளை இப்படியும் எனக்கொரு நினைப்பு உண்டு! பெரியவர்கள் தாங்கள் நிம்மதியாகத் தூங்கத்தான் குழந்தைகளுக்குக் கதை சொல்கிறார்களோ? என்று! இந்தச் சந்தேகத்திற்குப் பெரியவர்கள் தயவு செய்து தீர்வு சொல்ல வேண்டும்!
ஆக, "ஒரு ஊர்ல!" கண்டிப்பாய்க் கல்லூரிக்கு ஒத்துவராது! சரி, அப்படியென்றால் வேறு எப்படித்தான் கதை சொல்லுவதாம்?
************
எனது கல்லூரி அறையில் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், மூங்கில் கோட்டை எனப் பல புத்தகங்கள் நண்பர்களின் கண்களைப் பறிக்கும்! ஆனால் ஏதோ ஒரு விசை அவர்களைத் தடுக்கும்.
ஒன்று, அவர்கள் ஆங்கில வழியிலேயே வந்திருப்பார்கள். இல்லையெனில், தமிழ் வாசிப்பது கடிமான வேலை என்று நினைப்பவர்களாக இருக்கும்!
இருந்தாலும், அவர்களின் ஆர்வம் இப்படித்தான் வெளிப்படும் - "டே! சிவகாமியின் சபதம் நல்ல புத்தகம்னு சொல்லுவியே! அதோட கதையைச் சொல்லு!"
நானும் முறுவலித்தபடி இரவு ஒன்பது மணிக்கு மேல் வரச்சொல்லுவேன். எனக்குத் தெரியும்! சிவகாமியின் சபதம் அவ்வளவு எளிதாய்ச் சொல்லி முடிகிற கதை இல்லை என்று! அதுவும் என் நாவில் இருந்து வெளிப்பட்டால் பல நாட்கள் சிவகாமி மனதில் தங்கிவிடுவாள்!(மாமல்லர் கோபித்துக்கொள்ளப் போகிறார்!)
இப்பொழுது இரவு கதை கேட்க நண்பர்கள் தலையணைகளோடு?!! தயாராய் வந்துவிட்டார்கள்! கதையை எப்படி ஆரம்பிப்பது?
வந்த நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு மூலையில், தலையணையை மடியில் வைத்துக்கொண்டு "ம்! சொல்லுடா!" என்றார்கள்.

"நான் சொல்வது கிடக்கட்டும்! முதலில் உங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி! யாரிந்தச் சிவகாமி?" என்றேன் நான். அறையில் நிசப்தம்.
சில மணித்துளிகள் கழித்து, "சரி! பல்லவர்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?"
சட்டென்று பதில் வந்தது. "மகேந்திர வர்மா, நரசிம்ம வர்மா!..."- நண்பன் இன்னும் யோசித்தான்.
"ரொம்பச் சரி! நீ எப்போ இதப் படிச்சன்னு ஞாபகம் இருக்கா?" - நான்.
"Probably in seventh or eighth standard!". அவன் சொன்னதை அனைவரும் ஆமோதித்தார்கள்.
"இன்னும் கொஞ்சம் யோசி! எட்டாவதில், நமது வரலாற்று நூலில் அவர்களை ஒரு பத்தியில் அடக்கிவிடுவார்கள்! ஆனால் அந்த ஒரு பத்தியில் அவர்களின் பட்டப்பெயர்கள், வாழ்ந்த இடம்..." நான் முடிக்கவில்லை.
இன்னொரு நண்பன் இடையில் புகுந்தான் - "ஆங்! They ruled Kanchipuram! அப்புறம் அவங்க ரெண்டு பேர்ல யாருக்கோ 'வதபி கொண்டான்'னு பட்டப்பேர்!"
"டே! அது வதபி இல்ல 'வாதாபி'! Chalukya's capital city!"- இன்னொரு நண்பன் திருத்தினான்.
"நீங்கள் சொன்னதெல்லாம் சரி! அந்த ஒரு பத்தியில் அடங்கிய பல்லவர்கள்தான் ஒரு புத்தகமாய் வெளிப்பட்டு இருக்கிறார்கள்! சிவகாமி வேறு யாருமன்று! நரசிம்மரோட 'லவ்'...!"
இந்த இடத்தில் 'லவ்' என்பதைக் கவனிக்க வேண்டும்! கல்லூரிப் பையன்களுக்கு 'லவ்' என்ற வார்த்தையைச் சொன்னாலே உற்சாகம் தானாக வந்துவிடும்!
இதோ, மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல அனைவரும் மடியிலிருந்த தலையணையை ஓரமாய் வைத்துவிட்டு என்னருகே வந்தார்கள். ஒருவன் மட்டும் காதில் ரகசியமாய் "காதல் கதையா?" என்று கிசுகிசுத்தான்.
"மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல! அதையும் தாண்டி..." சொல்லிக்கொண்டே போனேன்.
இடையிடையே வரலாற்றிலும், புவியியலிலும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டேன்.
அஜந்தா, எல்லோரா எங்க இருக்கு?
சளுக்கியர்கள் இந்தியாவில் எந்தப் பகுதியை ஆண்டார்கள்?
ஹர்ஷர் - பாஹியன் ஞாபகம் இருக்கா?
ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் பதில் சொன்னார்கள்.
எனக்குக் களைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்! மணி நான்கு! புலிகேசி சிவகாமியாய்ச் சிறைப்பிடிக்குமிடத்தில் நிறுத்தினேன். "நாளைக்குப் பார்க்கலாமே!"
"ஹே! நாளன்னிக்கு எனக்கு லேப்! அதனால நாளைக்கு வேண்டாம்! நாளை மறுநாள், ப்ளீஸ்!" ஒரு நண்பன் கெஞ்சினான்.
எல்லோரும் கூடிப் பேசிய பிறகு, "நாளை மறுநாள்!" எனச் சொல்லிச் சென்றார்கள்.
"கேட்பவர்களுக்குத் தெரிந்த ஞானத்தைக் கொண்டு கேள்வியும் பதிலுமாகக் கதை சொல்லும் யுக்தியினைப் பின்பற்றுவது அவசியம் - முக்கியமாய் கல்லூரி மாணவர்களுக்கு!"
நண்பர்கள் சிவகாமியின் சபதத்துடன் விடவில்லை! பொன்னியின் செல்வனையும் சொல்லக் கேட்டுக் கொண்டார்கள்! அது மட்டுமன்றி, வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை மாலை 6:30க்குத் திருச்சி வானொலியில் ஒலிபரப்பபடும் சிவகாமியின் சபதத்தையும் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
என்னடா இவன்? மகாபாரதத்தில் ஆரம்பித்து சிவகாமியின் சபதத்தில் முடித்துவிட்டானே என்று நீங்கள் கேட்பது புரிகின்றது!

"நீங்கள் மெகா சீரியல் பார்ப்பீங்களா?" என்று என்னிடம் கேட்டு, கற்றுக் கொடுத்தவனிடமே வித்தையைக் காட்டி, 'குபாரவி' மகாபாரதக் கதை சொன்னதை நாளை சொல்கிறேனே!

நன்றி திரு. மீனாக்ஸ்! குமுறிக் கொண்டிருக்கும்நெருப்பினை விசிறி விடுவது போல் இருந்ததுஇந்தப் புகைப்படம்! இந்த மனித வில்லைப்பார்க்கும்பொழுது என் மனத்தில் ஏற்படும் கிளர்ச்சி... சொல்லி மாளாது!
இது வெறும் வானவில்லாக எனக்குத்தோன்றவில்லை! ஒரு சமூகத்தின் உரு... உயிர்... உதிரம்! இதே போன்ற ஒருசமூகத்தின் உரு... உயிர்... உதிரம், நான் என்று பெருமிதங்கொள்ளுவதற்கு முன்...
"தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும்" எனபள்ளிகளுக்கிடையேயான பேச்சுப் போட்டியில் முழங்கியவனில்லை நான்! இயல்பாகவே ' மேடைப் பேச்சு' என்று பேச்சுக்காகக் கூட நான் பேசியதில்லை!
ஆனால், தமிழை 'ஒலி'க்கச் செய்யாவிடினும், 'கவிதை'யாக 'கற்பனை'யாகவெள்ளைத் தாட்களில் ' ஒளி'க்கச் செய்தவனாய் பள்ளி வயதில் இருந்தேனெனஎன் வீட்டுப் பரணிலிருக்கும் பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் கூறக்கேட்கிறேன்!
எல்லாம் பள்ளியோடு! எனது 'புண்'ணியம், கலைகளில் விருப்பங்கொண்டஎன்னை, பெற்றோர் 'பொறி'யியலில் சிக்க வைத்தனர்! இருப்பினும் என்ன? அங்கும் தமிழ் வேட்கை!
தமிழில் பேசினால் வேற்று கிரகத்தவனைப் போலப் பார்க்கும் அந்தக்கல்லூரியிலும் வெற்றிக் கொடி கட்டினோம் என்று ஒரு வரியில்சொல்லுவதற்கில்லை!
அந்த வெற்றியைக் காண தியாகம் செய்தவை -
முதல் கல் - உரு:(2002)
மூன்று மாதங்கள் முட்டி மோதி, கவிதைகளையும் கதைகளையும் தமிழில்தட்டச்சு செய்து, கல்லூரித் தளத்தில் நாங்கள் ஏவிய "தமிழாரம்", அன்றுகல்லூரியின் ஒவ்வொரு கணினியிலும்! எல்லாம் சுபமென்று திருப்தியுறும்தருணம் எனக்குக் கிடைத்த பின்னூட்டம் - "ஏண்டா! எழுத்து 'உரு'வை இறக்கவேண்டுமாம்! எங்களுக்கு வேறு வேலையில்லை! நீயும் உன் தமிழாரமும்!"
ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது. ஐம்பது சதவீதம் தமிழர்களும், ஐம்பது சதவீதம்பிற மாநிலத்தவரும் பயிலும் கல்லூரியில் 'தமிழ்' வளர்ப்பது வாமனம்! இந்தப்பிழைப்பில், இருக்கும் கொஞ்ச நஞ்சத் தமிழர்களையும் 'எழுத்துரு இறக்கு!', 'C:\ க்குப் போ!' எனச் சொல்லி வெறுப்பேற்றினால்...!
முதல் 'கல்' - தடுக்கி விழுந்தேன்! உள்ளம் சொன்னது - இன்னும் "கல்"!
இரண்டாவது கல் - உயிர்:(2003)
பூத்த உடனேயே 'தமிழாரம்' வாட ஆரம்பித்தது - என் மனமும்! ஒரு மாத காலயோசனைக்குப் பிறகு முடிவு செய்தேன் -
இணையப் பக்கம் திறந்ததும், 'தமிழ்', தமிழாய்த் தெரிய வேண்டும்!
இம்முறை எனது அஸ்திரம், "Adobe Photoshop 6.0". அடுத்த இரு மாதங்களில்அனைத்துப் பகுதிகளுக்கும் தூரிகையால் 'உயிர்'
கொடுத்தேன்! குமிழ்கள், கதைகள், கவிதைகள் என எல்லாவற்றையும்வலைப்படங்களாய்த் (gif, jpeg) தீட்டினேன்!
முகப்பில் பாரதியின் கவிதை தாங்கிய 'புதிய தமிழாரம்' மீண்டும் ஏவப்பட்டது!
எதிர்பார்த்தபடியே நண்பர்களும் ஆசிரியர்களும் பாராட்ட, 'தமிழாரம்' கல்லூரித்தளத்திலிருந்து இணையத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டது!
இமைகளின் ஓரத்தில் துளிர்த்த இரு துளிகளைத் துடைத்துவிட்டுச் சொன்னேன் -"இணையத்திற்குத் தயாராக இன்னும் எங்களுக்கு அவகாசம் வேண்டும்!"
எனக்குத் தெரிந்திருந்தது! அனைத்துப் பக்கங்களும் வலைப்படங்களாக இருக்கும்தமிழாரத்தை இணையத்தில் ஏவுவது பெருந்தவறென்று! ஒவ்வொரு பக்கமும்ஏழு முதல் பத்து மெகா பைட்டுகளைக் கொண்டது! பக்கங்கள், உலாவியில்இறங்குகிறேன் பேர்வழி என்று நீண்ட மணித்துளிகளை எடுத்து வாசகர்களைவெறுப்பேற்றினால்...!
இரண்டாவது 'கல்' - இடறியது! இதயம் மட்டும் இன்னும் "கல்"!
மூன்றாவது கல் - உதிரம்:(2004)
'லினக்ஸ்' ஆதரவாளனாக இருந்தும்
'மைக்ரோ ஸாப்ட்'-இன் ஏகாதிபத்திய வலைக்குள் சிக்கினேன்!
Weft 3.0 Beta! (Web Embedding Font Tool)
இந்த ஊடகத்தால் கொஞ்சம் 'உதிரம்' மட்டும் செலவானது! இதோ இன்று நீங்கள்காணும் எமது "தமிழாரம்"!
******************
ஒவ்வொரு இடத்திலும் அடிபட்டு, மிதிபட்டு வந்த எனக்கு, "யுனிகோடு" - ஒருவரப்பிரசாதம்! ஆனால் இங்கேதான் வந்தது வினை!
காசி அய்யா, "என் கோடு, உன் கோடு, யுனிகோடு, தனி கோடு" என்று ஒரு போடுபோட, கணினி வைத்திருப்பவர்களெல்லாம் 'தமிழ்' வளர்க்கப் புறப்பட... இதுவளர்ச்சியா? இல்லை வீழ்ச்சியா என்றே ஐயம் வருகின்றது!
என்ன இவன் இப்படி சொல்கிறான் என்று என் மீது நீங்கள் பாய்வதற்கு முன் ஒருநிமிடம்...
இந்த இணையப் பூங்காவில் யார் வேண்டுமானாலும் "வலைப்பதிவுகள்" வளர்க்கலாம்! வளருங்கள் வாழ்த்துகிறேன்! ஆனால் இதே பூங்காவில் ஒரு "மரத்தை" சிலர் வளர்க்க எண்ணியிருக்கிறோம்! அது "தமிழ் மொழியாக்கம்"! அந்தப் பணிக்குக் கொஞ்சம் தகுதியுடையவர்கள் தேவை!
எனக்கும் தமிழ் தெரியும்! நானும் மொழிபெயர்ப்பேனென்று, தமிழை வேறோடுபெயர்த்துவிடாதீர்கள்!
பாலூட்டி வளர்த்த அன்னையையே, வளர்க்கும் பாக்கியம் எத்தனை பேருக்குக்கிடைக்கும்! அது நமக்குக் கிடைத்திருக்கிறது! நம் தாயை வளர்க்கும் பாக்கியம்! இணையத்தில் 'தமிழ்த் தாயை' வளர்க்கும் பாக்கியம்!
அந்தப் புண்ணியச் செயலுக்குத் தகுதியானவர்கள் போதும்! இல்லையெனில்தகுதி பட முயலுங்கள், போதும் - 'ஷ்ரேயாவைப்' போல!
Shreya commented in Valaipoo:
நானும் ஒரு உசாரில் மொழி பெயர்ப்பெல்லாம் செய்யப் போனேன்..2 சொல் "பெயர்த்தவுடன்" இது நமக்கு சரி வராது என்று விளங்கி,
விட்டுட்டேன். இன்னும் கொஞ்சம் படித்துவிட்டு/ சும்மா வீட்டில் பிரக்டிஸ் பண்ணிவிட்டு முயற்சியைத் தொடங்கலாமோ என்றும் எண்ணம் வருவதுண்டு.
Posted by: ஷ்ரேயா at September 21, 2004 09:24 PM
இதற்கு மேல் ஏதும் சொல்லத் தோன்றவில்லை! ஒரு வேலை இணையத்தில்தமிழ்' வளர்க்க நான் தான் இவ்வளவு கடினப்படுகிறேனோ?
தெரியவில்லை!
என்னைப் போன்று பல கற்களால் தடுக்கி, அவற்றையே தாண்டி, "மையில்கற்களாகச்" செய்த ஒரு உயிரின் ஆறுதல் பெறும்வரை, எனது ' உரு... உயிர்... உதிரம், உதிரும்....
:( யூனா
எதிர் வரும் இளைய தலைமுறையிடம் தமிழினைச் சேர்ப்பிக்கும் ஊடகமாய்இணையம் இருக்கும் தருவாயில், இணைய மொழியாக்கம் மிகத் தேவையானஒன்றுதான்! ஆனால், அத்தகைய சேவையைச் செய்யும் பொருட்டுஇணையத்தில் களமிறங்கியிருக்கும் ஆர்வலர்களின் "இணையா மொழியாக்கம்" பற்றியே நான் பேசுகிறேன்.

அட! வாளை எடுத்தவனெல்லாம் போர்க்களம் புகுவது போல, இணையத்தினை பயன்படுத்துபவனெல்லாம் மொழியாக்கம்செய்கிறேன் பேர்வழி என்று தமிழைப் பாடாய்ப்படுத்துவதுதேதற்போதைய நிலை! பாவம், மெய்யாகவே தமிழ் 'வலை'யில் சிக்கித் தவிக்கிறது!
சமீப காலமாக, நான் "கூகள்" தமிழ் ஆர்வலனாகச் சேவை செய்கிறேன்! தமிழ்மொழியாக்கம் என்ற பெயரில் நம் மொழியை எவ்வாறெல்லாம் இழிவு படுத்தமுடியுமோ, அவ்வாறெல்லாம் படுத்துகின்றனர் சிலர்!
தங்களால் முடிந்ததைச் செய்யவொண்ணாமல், ஒரு சேவையைகேலிகூத்தாக்குபவர்கள் சிலர்தான் என்றாலும், மாசில்லாத பாலில் ஒரு துளி விஷம்!
சரி! இதைப் போன்ற மொழியாக்கங்களை ஆராய்ந்து, அனுமதிக்கும் ' நடுவர்'???... அவரைத்தான் நானும் தேடிகொண்டிருக்கிறேன்!
இதோ-
The "IM_FEELING_LUCKYTM" button automatically takes you to the first web page returned for your query.An "IM_FEELING_LUCKY" search means less time searching for web pages and more time looking at them.
என்பதற்கான மொழியாக்கம்-
"Adhirshtam En PakkamTM" amukkaan thanaagavey ungal theyduthalin mudal inaya pakkathirkku kondusellum."Adhirshtam En Pakkam" artham : kuraivaana neram inaya pakkathai theyduthalukku - athikamaana neram avaigalai paarpatharku.Adhirshtamaanavaraa? Theyduthalai thodangi, muyarchi seiyungal!
" அமுக்கான்" என்ற சொல்லைக் கண்டாலே எனக்குப் பற்றிக் கொண்டுவருகிறது! என்னய்யா மொழியாக்கம் இது! இதற்கு 'பட்டன்' என்றேஎழுதிவிடலாம்! என்றாலும், 'குமிழ்' என்ற வார்த்தை அழகாக இருக்கிறதே! ('குமிழ்' - 'நாப்' மற்றும் 'பட்டன்' ஆகிய இரண்டிற்கும் பொதுவானதே! வேறு, நல்லசொற்களும் வரவேற்கப்படுகின்றன!)
இந்தப் பிழைப்பில், " மொழியாக்க ஆர்வலர் குழு" என்று ஒரு பகுதி! நான் கேட்டஒரேயொரு கேள்விக்கு(யார் நடுவர்?) இன்னும் பதிலைக் காணோம்! பார்க்க...
http://groups.google.com/groups?start=50&hl=en&lr=&ie=UTF-8&group=google.public.translators&selm=706c53ed.0409110816.652fb22d%40posting.google.com
இன்னும் கொஞ்சம் உலாவியதில், "தமிழ் மொழியாக்க ஆர்வலர்களே! இங்கே வாருங்கள்!" என்ற அறைகூவலுடன் அழைக்கின்றது ஒரு மின்னஞ்சல்! பார்க்க...
http://groups.google.com/groups?q=tamil&hl=en&lr=&ie=UTF-8&group=google.public.translators&selm=a3873bbf.0408271030.35d9dd48%40posting.google.com&rnum=7
"அட! இங்கேயாவது தமிழர்கள் இணைந்தார்களே!" என்று ஆர்வமாக அங்கேசென்றால்..."த்சோ! த்சோ! மார்புச் சளி வந்தவனைப் போல்இழுத்துக்கொண்டிருக்கிறது இந்தக் குழு!"

எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது!
நண்பர்களே! நான் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! நீங்களும் இம்மாதிரிமொழியாக்கத்தில் ஈடுபடுவதெல்லாம் இரண்டாம் பட்சம்! முதலில், தமிழ் கூறும் இணைய நல்லுகத்தால் வெறுத்துப் போயிருக்கும் எனக்குஆறுதலாய்ச் சில வார்த்தைகள்!...
:( யூனா